கடந்த சில நாட்களாக ஏற்பட்ட சீரற்ற வானிலையால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 63 குடும்பங்களை சேர்ந்த 207 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இந்த அனர்த்தங்களின்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்ததாகவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையிட்டுள்ளது.
அதிகபட்சமாக சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவில் 38 குடும்பங்களை சேர்ந்த 135 பேரும் காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் 19 குடும்பங்களை சேர்ந்த 54 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
—–
சபாநாயகர் அசோக ரன்வலவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இது தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
—–
இந்த ஆண்டு சுமார் 1.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 90,000 இற்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளதாக அதன் தலைவர் புத்திக ஹேவாவசம் குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 250,000 சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.2 மில்லியன் என்ற இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அந்த இலக்கை எட்டிய பின்னர், 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு இரண்டு மில்லியன் இலக்கை எட்டுவது இதுவே முதல் முறையாகும் என்றும் அவர் கூறினார்.