புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் ஆகியவை இணைந்து இந்தியத் திரைப்பட விழா தொடக்கம் மற்றும் 2023-ம் ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான விருது வழங்கும் விழாவை இன்று நடத்தினர்.
அலையன்ஸ் பிரான்சேஸ் கலை அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் வேளாண் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய் ஜெ.சரவணன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினைத் தொடங்கி வைத்து 2023-ம் ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதினையும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசினையும் “காதல்-தி கோர்” மலையாளத் திரைப்பட இயக்குநர் ஜியோ பேபி-க்கு வழங்கினர். முன்னதாக அமைச்சர் சாய் சரவணன் பேசும்போது, “இந்த அரங்கில் கூட்டம் இல்லை. இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தும்போது சம்மந்தப்பட்ட துறைக்கு மட்டும் சொல்லாமல், பொதுவாக சொன்னால் பலரும் வருவார்கள். அதுதான் சிறப்பு விருந்தினரை கவுரவிப்பதாக அமையும். புதுச்சேரி அரசும் என்ன செய்கிறது என்பது தெரியும்.
எனவே வரும் காலத்தில் ஊசுடு தொகுதி மக்களை நானே அழைத்து வருவேன்” என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர் தேனீ. ஜெயக்குமாரும் அரங்கில் கூட்டம் இல்லை என்பதை குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தகவல் ஒலிபரப்புத் துறையின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் துணை இயக்குநர் இந்திராணி போஸ், நவதர்ஷன் திரைப்படக்கழகச் செயலர் பழனி, அலையன்ஸ் பிரான்சேஸ் தலைவர் சதீஷ் நல்லாம், செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் கலியபெருமாள் மற்றும் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். தொடர்ந்து காதல் தி கோர் படம் திரையிடப்பட்டது.
பின்னர் இயக்குநர் ஜியோ பேபி செய்தியாளர்களிடம் கூறும்போது: “காதல் தி கோர் படத்துக்கு புதுச்சேரி அரசு விருது வழங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற ஒரு படத்துக்கு தமிழகம், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் இருந்து விருது கிடைப்பது என்பது பெருமையான தருணம்.
இப்படத்தின் நடிகர் மம்முட்டிக்கு முதலில் நன்றி தெரிவிக்கிறேன். அவர் தான் இந்த படத்தின் தயாரிப்பாளரும் கூட. இந்தியாவில் வேறு எந்த நடிகரும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டார்கள். படத்தில் நடத்துள்ள ஜோதிக்காவுக்கும் நன்றி கூறுகிறேன். இது மறக்கமுடியாத தருணம்.
இதுவரை எடுக்கப்பட்ட படங்கள் சீரியஸான கதைகளங்களை கொண்டவை. ஆகவே எனது அடுத்த படத்தை சற்று வித்தியாசமான கதைகளத்துடன் எடுக்க வேண்டும் என்று எண்ணியுள்ளேன். ஆனாலும் இன்னும் முடிவு செய்யவில்லை. என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் நடிகர் அல்லு அர்ஜூன் கைது குறித்து கேட்டபோது, “அல்லு அர்ஜுன் ஒரு நடிகர். அவர் வந்தாலே கூட்டம் அதிகளவில் வருதுண்டு. இந்த குற்றத்தில் அவர் நேரடியாக சம்மந்தப்படவில்லை. இருந்தாலும் கூட்டமான இடங்களுக்கு வரும்போது பெற்றோர், பொதுமக்கள் என அனைவரும் பொறுப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம். மற்றபடி இதில் எனக்கு என்ன சொல்வது என்பது தெரியவில்லை. நடிகர் அல்லு அர்ஜூன் கைது வருத்தமான நிகழ்வு” என்றார். தொடர்ந்து இந்த விழா வரும் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வங்காளம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களும் ஒளிபரப்பப்பட உள்ளது.