1984ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘தி கராத்தே கிட்’. ஒரு புதிய நகரத்துக்கு செல்லும் இளைஞன் ஒருவன் அங்குள்ள மற்ற இளைஞர்களால் துன்புறுத்தலுக்கு ஆளாகிறான். அவன் மேல் பரிதாபம் கொள்ளும் முதியவர் ஒருவர் அந்த இளைஞனை மிகச்சிறந்த கராத்தே வீரனாக மாற்றுவதே இதன் கதை.
இதன் பிறகு 1984ல் இதன் அடுத்தடுத்த 2 பாகங்கள், இதனைத் தொடர்ந்து சில அனிமேஷன் தொடர்கள், 2010ஆம் ஆண்டு வில் ஸ்மித் மகன் ஜேடன் ஸ்மித் – ஜாக்கி சான் நடித்த ‘கராத்தே கிட்’, நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘கோப்ரா கை’ என இப்படம் பல வடிவங்களில் உருவானது. இவை அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவை.
இந்த வரிசையில் தற்போது ‘கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்’ என்ற பெயரில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகியுள்ளது. இதில் மீண்டும் ஜாக்கி சானே கராத்தே கற்றுத் தரும் மாஸ்டராக வருகிறார். இதில் ‘கராத்தே கிட்’ ஒரிஜினல் படங்களில் இளைஞனாக வந்த ரால்ஃப் மாச்சியோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2025ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – கராத்தே கிட் படங்களில் சிறப்பம்சமே அதன் ஆழமான வசனங்கள் தான். ஜாக்கி சானின் வாய்ஸ் ஓவரில் ஈர்க்கும் வசனங்களுடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. வெறும் ஆக்ஷன் காட்சிகளை மட்டுமே நிரப்பாமல் முந்தைய படங்களைப் போலவே மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இப்படம் இருக்கும் என்பதை ட்ரெய்லரிலேயே தெரிந்து கொள்ள முடிகிறது. 2010 ‘கராத்தே கிட்’ படத்தைப் போலவே இதிலும் ஜாக்கி சானுக்கு அழுத்தமான கதாபாத்திரம் தரப்பட்டுள்ளது.