கார் பந்தயம் போட்டி நடைபெறும் காலங்களில் படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அஜித் தெரிவித்துள்ளார்.
‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களின் பணிகளை முடித்துவிட்டார் அஜித். இதனைத் தொடர்ந்து துபாயில் தனது கார் ரேஸ் அணி பங்கேற்கும் போட்டியில் கலந்துக் கொண்டுள்ளார். அவருடைய அடுத்த படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இதனிடையே கார் பந்தயப் போட்டிக்கு இடையே அளித்துள்ள பேட்டியில் அஜித், “2002, 2003, 2004 ஆண்டுகளில் கார் பந்தயப் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். ஆனால், அதற்கு பின் முழுமையாக பங்கேற்க முடியவில்லை. 2010-ம் ஆண்டு European 2-வில் பங்கேற்றேன். படங்களில் தொடர்ச்சியாக நடிக்கவிருந்ததால் இடையில் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை.
தற்போது கார் பந்தயப் போட்டிகளில் ஓட்டுநராக மட்டுமன்றி உரிமையாளராகவும் பங்கேற்றுள்ளேன். ஆகையால் கார் பந்தயக் காலங்களில் இனி படங்களில் நடிக்கமாட்டேன். அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை படங்களில் நடித்துக் கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார் அஜித்.
நடிகர் மட்டுமன்றி கார், பைக் பந்தயப் போட்டிகளில் தீவிர ஆர்வம் கொண்டவர் அஜித். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் பைக்கில் ஊர் சுற்றுவது தான் அவருடைய பொழுதுபோக்கு. துபாயில் நடைபெறும் சர்வதேச கார் பந்தயப் போட்டிகளில் தனது அணியினருடன் பங்கெடுத்துள்ளார் அஜித்.