ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.186 கோடி வசூல் ஈட்டி வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் காம்போவில் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், கியாரா அத்வானி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ள இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார்.
இப்படம் நேற்று (ஜன.10) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் முதல் நாள் வசூலில் மிகப் பெரிய அளவில் கல்லா கட்டியிருக்கிறது ‘கேம் சேஞ்சர்’. அதாவது, முதல் நாளிலேயே உலக அளவில் ரூ.186 கோடி வசூல் ஈட்டி உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் பட்ஜெட் ரூ.400 கோடி முதல் ரூ.450 கோடி வரை இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், சில தினங்களிலேயே பட்ஜெட்டை தாண்டி லாபக் கணக்கத்தைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘கேம் சேஞ்சர்’ படத்தில் ராம் சரணுக்கு வில்லனாக நடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அவரது கேரக்டருக்கும் தியேட்டரில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “கேம் சேஞ்சர் படம் சுமார் ரூ.400, 500 கோடியில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் வட்டி எல்லாம் கணக்குப் போட்டால் எங்கேயோ இருக்கிறது. தில் ராஜு சாருக்கு ஷங்கர் சார் என்றால் ரொம்ப பிரியம்” என்று குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது.