இன்று இந்திய 76வது குடியரசு தினம்

76வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தனது வாழ்த்துச் செய்தியில், “நமது 76வது குடியரசு தினத்தில் நாட்டுமக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
நமது சுதந்திர நூற்றாண்டின் இறுதி காலாண்டில் நுழையும் வேளையில், 2047 ஆம் ஆண்டில் வளர்ந்த இந்தியாவை நனவாக்க உறுதியுடன் உழைப்போம்.
முதலில் தேசம் என்ற நமது அசைக்க முடியாத உறுதிப்பாட்டில் நங்கூரமிடுவோம்.
சமூக நல்லிணக்கம், குடும்ப விழுமியங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுதேசி உணர்வு மற்றும் குடிமை கடமைகள் ஆகிய நமது நாகரிக நெறிமுறைகளை வளர்த்து, மலரச் செய்வோம். நம்பிக்கை மற்றும் வாய்ப்புகளின் உணர்வை மேம்படுத்துவதன் மூலம் இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் பயணத்தை நமது இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்லட்டும்” என தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியில், “குடியரசு தின நல்வாழ்த்துகள். இன்று, நமது குடியரசின் 75 ஆண்டுகளைக் கொண்டாடுகிறோம். தொலைநோக்கு பார்வையுடன் நமது அரசியலமைப்பை வடிவமைத்த அனைவருக்கும் நாம் அஞ்சலி செலுத்துகிறோம். நமது பயணம் ஜனநாயகம், கண்ணியம் மற்றும் ஒற்றுமையின் அடிப்படையில் அமைவதை உறுதிசெய்வோம். இந்த இலட்சியங்களைப் பாதுகாப்பதிலும், வலுவான, வளமான இந்தியாவை கட்டமைக்க உழைப்பதிலும் நமது முயற்சிகளை இரட்டிப்பாக்க இந்த சந்தர்ப்பம் நம்மை ஊக்குவிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

——-

76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றி, பாதுகாப்புப் படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நாடு முழுவதும் 76வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். தலைநகர் டெல்லியில் காலை 10.30 மணி அளவில் குடியரசு தினவிழா தொடங்கியது. இதற்காக கடமைப் பாதைக்கு வந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, சிறப்பு விருந்தினரான இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ ஆகியோரை, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஏற்றினார். இதையடுத்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று தேசியக் கொடிக்கும் தேசிய கீதத்துக்கும் மரியாதை செலுத்தினர். அப்போது, 4 ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன.
இதையடுத்து ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. ராணுவம், கடற்படை, விமானப்படை உள்பட பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகள் குழுக்களாக அணிவகுத்து வந்து குடியரசுத் தலைவருக்கு மரியாதை செலுத்தினர். இதையடுத்து, நாட்டின் ராணுவ வலிமையை பறைசாற்றும் ராணுவ வாகன அணிவகுப்பு நடத்தப்பட்டது. பல்வேறு நவீன ரக வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தின.
இதையடுத்து, பல்வேறு மாநிலங்களின் அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு மாநிலங்களின் கலாச்சார நடனங்கள் நடைபெற்றன.
முன்னதாக, குடியரசு தின கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பிரதமருடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கலந்து கொண்டார். ராணுவ அதிகாரிகள் பலரும் மரியாதையுடன் வணக்கம் செலுத்தினர். இதனையடுத்து, இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related posts