வல்லான்: திரை விமர்சனம்

ஜோயல் என்ற தொழிலதிபர் கொலையாகிக் கிடக்கிறார். எந்தவொரு தடயமும் கிடைக்காத நிலையில், விரைவாகக் கொலையாளியைக் கண்டுபிடிக்கும்படி, இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் துறை அதிகாரியான திவாகரிடம் (சுந்தர்.சி) மறைமுகமாக வழக்கை ஒப்படைக்கிறார். அவரின் உயரதிகாரி. திவாகர் கொலையாளியை நெருங்கினாரா இல்லையா என்பது கதை.
ஒரு கொலையைத் துப்புத்துலக்கும் படத்தில் பார்வையாளர்களை உசுப்பிவிடும் சுவாரஸியமான திருப்பங்களை அளவாக, அதேநேரம் திரைக்கதைக்குள் உரிய இடங்களில் வைத்திருக்கிறார் இயக்குநர் வி.ஆர்.மணி சேயோன். எடுத்துக்காட்டாகக் கொலை நடந்த இடத்தில் கிடைக்கும் தலைமுடியைக் கொண்டு ‘ஜீனோடைப்’ என்ற டி.என்.ஏ தொழில்நுட்பத்தின் மூலம் கொலையாளியின் தலையும் முகமும் எப்படி இருந்திருக்க வாய்ப்பு அதிகம் எனத் துப்புத்துலக்கி விசாரணையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதைக் கூறலாம்.
அழகான காதலாக மாறும் திருமண ஏற்பாடு, திரையுலகில் அடையாளம் பெறப் போராடும் பெண்களில் சிலர் கொடுக்க வேண்டியிருக்கும் விலை, போதைப் பொருட்களை வாங்கத் தேவைப்படும் பணத்துக்காகக் குற்ற வாழ்க்கை வாழும் ஆபத்தான ஆட்கள் என ஒரு கொலையின் வழி விரியும் கதையில் பல அடுக்குகளில் உலவும் கதாபாத்திரங்களின் வாழ்க்கையை கோத்து சஸ்பென்ஸ் த்ரில்லர் அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு தினேஷ் பொன்ராஜின் படத்தொகுப்பு கைகொடுத்திருக்கிறது.
சுந்தர்.சி. காவல் அதிகாரி கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். தான்யா ஹோப்புக்கும் அவருக்குமான ‘கெமிஸ்ட்ரி’யும் எடுபட்டுள்ளது.
சினிமாவில் வாய்ப்புத்தேடுபவராக ஹெபா பட்டேல் கவனிக்க வைக்கிறார். தொழிலதிபராக கமல் காமராஜ், அவரது மனைவியாக அபிராமி வெங்கடாசலம் ஆகியோரும் ஈர்க்கிறார்கள். மணி பெருமாளின் ஒளிப்பதிவு, திரைக்கதையின் விளையாட்டுக்கு ஈடுகொடுத்திருக்கிறது. சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள், பின்னணி இசை தரம்.
கொலை, துப்புத்துலக்கும் அதிகாரிக்கு அதி லிருக்கும் உணர்வுப்பூர்வ தொடர்பு, கொலையைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் குறுக்கிட்டவர்கள் மீது படரும் குற்ற நிழல் என ஊகங்களை முறியடிக்கும் விதமாகக் களமாடுகிறான், இந்த வல்லான்.

Related posts