மத்திய ரிசர்வ் காவல் படையில் பணியாற்றும் அர்ஜுனும் (கிஷண் தாஸ்), தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மீராவும் (ஸ்மிருதி வெங்கட்) காதலிக்கிறார்கள். நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த நிலையில், மீராவின் வீட்டில் ரோகித் என்பவர் இறந்து கிடக்கிறார். அங்கே வரும் அர்ஜுன், அந்தச் சூழ்நிலையை எப்படிக் கையாண்டார்? ரோகித் யார்? உண்மையில் என்ன நடந்தது என்பதை விரித்துச் சொல்கிறது கதை.
ஒரு விபத்து கொலையாகத் தெரியலாம். அல்லது குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கொலையை விபத்துபோல் சோடனைச் செய்யலாம். ஆனால் அதிலிருக்கும் உண்மையைக் கூர்ந்து நோக்கி வெளிக்கொணரும் நேர்கொண்ட பார்வையே சட்டத்தின் கண்களுக்கு ஒளியைப் பாய்ச்சுகிறது. ஆனால், இந்தக் கதையில், சட்டத்தின் கண்களை மறைக்க, நாயகன் ஆடும் ஆட்டத்தைப் பதற்றத்துடன் காண வைக்கிறது திரைக்கதை.
அதே நேரம் அர்ஜுன், சக அதிகாரிகள் மீது தவறுதலாக ஆயுதப் பிரயோகம் செய்து விடும் காட்சியைநம்பகமாக அமைக்கத் தவறியிருக்கிறார் இயக்குநர். ஆனால், மீண்டும்பணியில் இணைவதில் நிலவும் நாயகனின் சிக்கலான மனநிலை, மீராவுடனான காதல், அதற்கு வரும் தடை, எல்லாம் சரியாகும் என எண்ணும்போது நடக்கும் முக்கியச் சம்பவம், அதன் பிறகான நாயகனின் காய் நகர்த்தல்கள் ஆகியவற்றை ஒரே சீரான காட்சிகளாக அடுக்கியிருப்பது ஈர்க்கிறது. அதேபோல் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உரையாடலிலும் இயல்பைக் கொண்டு வந்திருக்கிறார்.
அர்ஜுன் கதாபாத்திரத்தை முடிந்தவரை நம்பகமாக வெளிப்படுத்தி இருக்கிறார் கிஷண் தாஸ். பதற்றத்தைப் பார்வையில் பதுக்கி வைத்திருக்க வேண்டிய சில காட்சிகளில் தட்டையான லுக்குகளை கொடுக்கிறார். எதிர்வீட்டு இளைஞனை எதற்காகத் தனது வீட்டில் சுதந்திரமாக உலவவிட வேண்டும் என்கிற மர்மத்தை ஸ்மிருதி, தன் நடிப்பில் கடைசிக் காட்சிக்கு முன்பு வரை நன்கு பராமரித்துள்ளார். ரோகித்தாக வரும் ராஜ் அய்யப்பனின் நடிப்பிலும் குறையில்லை. சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் கீதா கைலாசம், நடிப்பளவை கச்சிதமாகக் கொண்டு வந்திருக்கிறார்.
சிக்கலான த்ரில்லர் நாடகத்தின் சஸ்பென்ஸை தக்க வைக்கிறது ராஜா பட்டாசார்ஜியின் ஒளிப்பதிவு. தர்புகா சிவாவின் பாடல்கள் ஓகே ரகம். அவரைத் தனது அபாரமான பின்னணி இசையால் பின்னுக்குத் தள்ளிவிடுகிறார் அஸ்வின் ஹேமந்த். சிசிடிவி, காவலாளி, நூற்றுக்கணக்கான குடிப்பிருப்பு வாசிகள் எனப் பல சவால்கள் நிறைந்திருக்கும் அடுக்ககத்தில், ஒரு சடலத்தை நாயகன் எப்படி அப்புறப் படுத்தப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பை, நம்பகமாகவும் தர்க்க நியாயத்துடனும் செய்து முடிக்கும்போது,காதலும் சஸ்பென்ஸும் சரியான கலவையில் இணைந்த திரை அனுபவத்தைத் தருகிறது இந்தத் தருணம்.