எண்ட் கேம்’ படத்துடன் ஸ்டீவ் ரோஜர்ஸ் கதாபாத்திரம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு ‘ஃபால்கன்’ என்ற சூப்பர் ஹீரோவாக இருந்த சாம் வில்சனை புதிய கேப்டன் அமெரிக்காவாக ஒரு வெப் தொடர் மூலம் அறிமுகப்படுத்தியது மார்வெல். தற்போது புதிய கேப்டன் அமெரிக்காவுக்காக பிரத்யேக முதல் படமாக வெளியாகியுள்ள ‘கேப்டன் அமெரிக்கா: ப்ரேவ் நியூ வேர்ல்ட்’ (Captain America: Brave New World) எப்படி இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்.
ராணுவத் தளபதியாக இருந்து பழைய கேப்டன் அமெரிக்கா, ஹல்க் போன்ற சூப்பர் ஹீரோக்களை துரத்திய தண்டர்போல்ட் ராஸ் (ஹாரிஸன் ஃபோர்ட்) தற்போது அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ளார். இந்திய பெருங்கடலில் திடீரென தோன்றிய ‘செலஸ்டியல்’ தீவில் இருக்கும் ‘அடமான்டியம்’ (எக்ஸ்-மென் குறியீடு) யாருக்கு சொந்தம் என்பதில் இந்தியா, ஜப்பான், அமெரிக்க, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இப்படியான சூழலில் புதிய கேப்டன் அமெரிக்காவான சாம் வில்சனிடம் (ஆண்டனி மெக்கி) புதிய அவெஞ்சர்ஸ் குழு ஒன்றை உருவாக்குமாறு அதிபர் கோரிக்கை வைக்கிறார். அதற்கான முக்கியத்துவத்தையும் சொல்கிறார்.
இன்னொரு பக்கம் ராணுவ வீரர்களின் மூளைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் சில பல நாச வேலைகளை தி லீடர் எனப்படும் நபர் செய்து வருகிறார். இதனால் தனிப்பட்ட முறையில் கேப்டன் அமெரிக்காவுக்கும், அதிபர் ராஸுக்கும் சில பாதிப்புகள் ஏற்படுகின்றன. வில்லனின் பின்னணி என்ன? கேப்டன் அமெரிக்காவால் அவரை தடுக்க முடிந்ததா என்பதே படத்தின் திரைக்கதை.
‘எண்ட் கேம்’ படம் வரை எந்தவித சறுக்கலும் இன்றி தொடர்ந்து மேலே மேலே சென்று கொண்டிருந்த மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ், அயர்ன் மேன், ஸ்டீவ் ரோஜர்ஸ் போன்ற பெரும் தலைகள் இல்லாததால் கடும் தடுமாற்றத்துக்கு உள்ளானது. இதில் இடையிடையே ‘லோகி’, ‘வாண்டாவிஷன்’ போன்ற வெப் தொடர்களும், ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி 3’, ‘டெட்பூல் & வோல்வரின்’ போன்ற படங்களும் அவ்வப்போது கம்பேக் கொடுத்து வந்தன.
இப்படியான சூழலில் வெளியாகியிருக்கும் இந்தப் படம், மீண்டும் மார்வெலுக்கு ஒரு சரிவு என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. முதல் விஷயம், ‘ஃபால்கன் அண்ட் தி வின்டர் சோல்ஜர்’ வெப் தொடரில் புதிய கேப்டன் அமெரிக்காவுக்கான பில்டப் மிக சரியான விகிதத்தில் கொடுக்கப்பட்டு அந்த கதாபாத்திர வடிவமைப்பு ரசிகர்களின் மனதில் நன்கு பதிந்திருந்தது. ஆனால், இப்படத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே சாம் வில்சனுக்கான ‘ஹீரோயிக்’ தருணங்கள் கைகொடுத்துள்ளதே தவிர ஒட்டுமொத்தமாக ஒரு அவெஞ்சருக்கான ஆளுமை எங்குமே வெளிப்பட்டதாக தெரியவில்லை.
2014-ல் வெளியான ‘கேப்டன் அமெரிக்கா: வின்டர் சோல்ஜர்’ படத்தை எடுத்துக் கொண்டால் அதில் ஆக்ஷன் காட்சிகள் குறைவுதான். ஆனால் ஜேம்ஸ் பாண்ட் பாணி புத்திசாலித்தனமான துப்பறியும் காட்சிகள் படம் முழுக்க இடம்பெற்றுள்ள சூப்பர் ஹீரோ படம் என்பதையும் தாண்டி ஒரு தரமான ஸ்பை த்ரில்லராக அப்படத்தை மாற்றியது. ஆனால் அதே பாணியிலான ஒரு கதையை எடுத்துக் கொண்டு வலுவான திரைக்கதையை அமைக்காமல் சொதப்பியிருக்கின்றனர்.
கேப்டன் அமெரிக்காவின் அறிமுகக் காட்சி, பக்கி பார்ன்ஸ் – சாம் வில்சன் உரையாடும் காட்சி, ரெட் ஹல்க் என படத்தின் குறிப்பிடத்தக்க காட்சிகள் வெகு குறைவு. வழக்கமாக மார்வெல் படத்தில் இடம்பெறும் நகைச்சுவை வசனங்களும் இதில் முற்றிலுமாக மிஸ்ஸிங். தொடக்கம் முதல் இறுதி வரை ஒருவித தீவிரத்தன்மையுடனே கதை நகர்வது சலிப்பை ஏற்படுத்துகிறது.
ஸ்டீவ் ரோஜர்ஸின் ‘கேப்டன் அமெரிக்கா’ சண்டைகளில் ஒருவித ஃபயர் இருக்கும். ஆனால் இங்கு சாம் வில்சன் ‘பவர் சீரம்’ எதையும் எடுத்துக் கொள்ளவில்லை என்பதற்காக சண்டைக் காட்சிகளை வேண்டுமென்றே சற்று ஆக்ரோஷம் குறைவாக அமைத்திருப்பது நெருடுகிறது. ரசிகர்கள் சூப்பர் ஹீரோ படங்களுக்கு வருவதே அது போன்ற சண்டை காட்சிகளை எதிர்பார்த்துதானே?
க்ளைமாக்ஸில் வரும் ரெட் ஹல்க் – கேப்டன் அமெரிக்கா சண்டை காட்சி விதிவிலக்கு. 2008-ல் வெளியான ‘இன்கிரெடிபிள் ஹல்க்’ படத்துக்குப் பிறகு ஒரு ‘வெறித்தனமான’ ஹல்க்கை இதில் பார்க்க முடிகிறது. அந்தக் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் அதிகமாக இருக்கிறது,
கிராபிக்ஸ், இசை, ஒளிப்பதிவு என தொழில்நுட்ப அம்சங்கள் எதிலும் குறையில்லை.
ராஸ்/ரெட் ஹல்க் ஆக வரும் பழம்பெரும் நடிகர் ஹாரிசன் ஃபோர்ட் ஈர்க்கிறார். கேப்டன் அமெரிக்கா சாம் வில்சன் நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவரது உதவியாளராக வரும் டேனி ரெமிரெஸ் நல்ல தேர்வு. ‘பிரேக்கிங் பேட்’ தொடர் மூலம் பிரபலமான கியான்கார்லோ எஸ்பாசிடோ வரும்போது அரங்கம் அதிர்கிறது.
2026-ஆம் ஆண்டு வரப்போகும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்துக்கான சூப்பர் ஹீரோக்களை ஒன்றிணைப்பதற்கான முன்னெடுப்பு படத்தில் வருகிறது. படத்தின் போஸ்ட் கிரெடிட் காட்சியிலும் இதற்கான குறியீடு வைத்துள்ளனர். ஆனால் அதற்கு நியாயம் செய்யும் வகையில் சரியான பில்டப்போ, சுவாரஸ்யமான திரைக்கதையோ இல்லாததால் ‘கேப்டன் அமெரிக்கா ப்ரேவ் நியூ வேர்ல்ட்’ மார்வெல் ரசிகர்களை ஈர்க்க தவறுகிறது.