பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசாங்கம், அவ்வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும். அதேவேளை அச்சட்டத்தினை பிறிதொரு சட்டத்தினால் பதிலீடு செய்யாமல், முழுமையாக நீக்குவது மிகமிக அவசியமாகும் என பயங்கரவாதச்சட்ட ஒழிப்பை நீண்டகாலமாகக் கோரிவரும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனோகணேசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ராஜநாயகம் பாரதிக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவஞ்சலி கூட்டம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை கொழும்பு, வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் பாரதியுடனான தமது நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டபோதே அவர்கள் மேற்குறிப்பிட்டவாறு வலியுறுத்தினார்.
அதன்படி முதலாவதாக உரையாற்றிய இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்,
‘இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கெனக் கொண்டுவரப்பட்டு, இப்போது பயங்கரவாதத்துக்குத் துணைபோகின்ற பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாகத் துடைத்தெறிவதைத் தவிர வேறெதுவும் நாம் ஊடகவியலாளர் பாரதிக்குச் செலுத்தக்கூடிய சிறந்த அஞ்சலியாக அமையாது. தற்போதைய ஆட்சியாளர்கள் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவோம் என்ற மிகமுக்கிய வாக்குறுதியை அளித்து ஆட்சிபீடமேறியவர்களாவர்.
ஆனால் இன்றளவிலே அவர்கள் அதனை மறுபக்கம் திருப்பி வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் நீதிமன்றத்தின் ஊடாக விடுதலை பெறமுடியாமல் சிறைச்சாலைகளில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுப்பது தான் அதற்காக அமைதியாக, ஆர்ப்பாட்டமின்றி, எழுத்தின் ஊடாகப் போராடிய பாரதிக்குச் செலுத்துகின்ற அஞ்சலியாக இருக்கும்’ எனச் சுட்டிக்காட்டினார்.
அவரைத்தொடர்ந்து அவ்விடயத்தை ஆமோதித்துப்பேசிய தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், பயங்கரவாதத்தடைச்சட்டம் குறித்து தானும் பாரதியும் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியதை நினைவுகூர்ந்தார்.
தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாகக்கூறி ஆட்சிபீடமேறியதாக சுட்டிக்காட்டிய அவர், அதனை நிறைவேற்றவேண்டிய கடப்பாடு அவர்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டார். அத்தோடு கடந்த அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதாகவும், அதுவரை அச்சட்டத்தின் பிரயோகத்துக்கு இடைக்காலத்தடை விதிப்பதாகவும் கூறியிருந்த போதிலும், அவை உரியவாறு நிறைவேற்றப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை நிகழ்வில் உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பின்வருமாறு குறிப்பிட்டார்:
‘இங்கு ரவூப் ஹக்கீமினால் முன்மொழியப்பட்டு, மனோகணேசனால் வழிமொழியப்பட்ட ஒரு விடயத்தை நானும் மீளவலியுறுத்த விரும்புகிறேன். பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும். அச்சட்டம் நீண்டகாலத்துக்கு முன்னரே நீக்கப்பட்டிருக்கவேண்டும். இச்சட்டம் நடைமுறையிலிருந்த காலப்பகுதியில் பாரதி ஊடகவியலாளராகப் பணிபுரிந்ததுடன், இச்சட்டத்தின்கீழ் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களை நாம் பார்த்திருக்கிறோம். தற்போதைய ஆட்சியாளர்கள் ஏற்கனவே வாக்குறுதியளித்ததைப்போல் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கவேண்டும். அதேவேளை இச்சட்டத்தைப் பிறிதொரு சட்டத்தினால் பதிலீடு செய்யாமல், முழுமையாக நீக்கவேண்டியது மிகமிக அவசியமானதாகும்’ என வலியுறுத்தினார்.