உயர்நீதிமன்றம் முதல் நீதிவான் நீதிமன்றம் வரை சுமார் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.
நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான வசதிகள் நீதிமன்றத்துக்கு வழங்கப்படுமென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (01) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
சட்டத்தின் ஆட்சிக்கு அமைய நாட்டை நிர்வகிப்பது எமது பிரதான இலக்காகும். சட்டத்தின் ஆட்சி மலினப்படுத்தப்படுகின்ற நிலையில் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. ஆகவே நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான கொள்கையாகும்.
நீதியமைச்சின் கீழ் 24 நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் உள்ளடங்குகின்றன. பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் நீதியமைச்சுக்கு 24 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றங்கள் மற்றும் நீதித்துறை அமைச்சுடன் தொடர்புடைய இதர நிறுவனங்களில் மொத்தமாக 6,026 பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றன. புதிய ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வெகுவிரைவில் வெற்றிடங்கள் நிரப்படும்.
உயர்நீதிமன்றம் முதல் நீதிவான் நீதிமன்றம் வரை சுமார் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.
ஆகவே நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான வசதிகள் நீதிமன்றத்துக்கு வழங்கப்படும்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இடைநிறுத்தப்பட்ட நீதிமன்ற கட்டட அபிவிருத்திக்கு போதுமான நிதி ஒதுக்கப்படும். நீதிதுறை சுயாதீனமான முறையில் செயற்படும் என்பதற்கு உத்தரவாதம் வழங்க முடியும் என்றார்.