அகத்தியா: திரை விமர்சனம்

சினிமா கலை இயக்குநரான அகத்தியா (ஜீவா) ஒரு படத்துக்காக, தனது சொந்தக் காசை போட்டு புதுச்சேரியில் உள்ள ஒரு பழங்கால பங்களாவைப் பேய் வீடாக மாற்றுகிறார். படம் திடீரென நின்று போக, என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் அகத்தியாவுக்கு அவரது தோழி வீணா (ராஷி கன்னா) ஒரு ஐடியா கொடுக்கிறார்.

வெளிநாட்டில் இருக்கும் ‘ஸ்கேரி ஹவுஸ்’ போன்று இங்கு நாம் ஏன் உருவாக்கக் கூடாது? அதன் மூலம் கட்டணம் வசூலித்துப் போட்ட காசை எடுக்கலாம் என்கிறார். அதன்படி செய்கிறார்கள். கூட்டம் குவிகிறது. ஆனால், அந்த வீட்டில் உண்மையிலேயே சில ரகசியங்களும் பேயும் இருப்பது தெரிய வருகிறது. இதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

ஃபேன்டஸி ஹாரர் கதையான இந்தப் படத்துக்குள், பீரியட், த்ரில்லர், பழிவாங்குதல், சித்த மருத்துவம், அம்மா சென்டிமென்ட், சித்தர் என பல விஷயங்களைக் குழைத்து மிக்ஸ்டு ஜானராக உருவாக்கி இருக்கும் இயக்குநர் பா.விஜய், அதில் வெற்றி பெற்றிருக்கிறார். 1940-ம் ஆண்டிலும் நிகழ்காலத்திலுமாக நடக்கும் கதையில் ஒரு கமர்ஷியல் படத்துக்கான அத்தனை விஷயங்களையும் ரசிக்கும்படி இணைத்திருக்கிறார்.

பிரெஞ்சு அதிகாரி எட்வின் டூப்ளெக்ஸுக்கும் (எட்வர்ட் சோனன்பிளிக்) சித்த மருத்துவர் சித்தார்த்தனுக்கும் (அர்ஜுன் சர்ஜா) நடக்கும் மோதலும் நட்பும் இறுதியில் எதிர்பாராத அந்த திருப்பமும் கதைக்குள் நம்மை இழுத்துச் செல்கின்றன. பழங்கால பியானோவை வீணா வாசிக்கும்போது, அங்கு ஏற்படும் மாற்றங்களும் அதன்பிறகு என்ன நடக்குமோ என்கிற எதிர்பார்ப்பும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.

கை, கால்களை அசைக்க முடியாத டூப்ளெக்ஸின் சகோதரி ஜாக்குலினை (மெடில்டா), சித்தார்த்தன் குணமாக்குவது, ஒரு வேரைக் காட்டியதும் மோத வரும் யானை வணங்கி நிற்பது, சுதந்திரத்துக்கு முந்தைய விடுதலை போராட்டம் என கதையோடு பயணிக்கும் பல காட்சிகள் ரசனையாக இருக்கின்றன.

சமீபகாலமாக வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்யும் நடிகர் ஜீவாவுக்கு இந்த ‘அகத்தியா’வும் கை கொடுக்கிறது. அவர்தான் ஹீரோ என்றாலும் சித்த மருத்துவராக வரும் அர்ஜுன் சர்ஜா, ஸ்கோர் செய்கிறார். அவருடைய கதாபாத்திர வடிவமைப்பும் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பும் அந்த பீரியட் எபிசோடை மிகவும் ஈர்க்க வைக்கிறது. வில்லத்தனத்தை முகத்தில் காட்டும் எட்வர்ட் சோனன்பிளிக், காதல் காட்சிகளில் கவரும் மெடில்டா, சில டைமிங் காமெடியில் சிரிக்க வைக்கும் ஷா ரா, ராதாரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், சென்டிமென்ட் காட்சியில் ரோகிணி, சார்லி ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசை என்றாலும் படத்தில் வரும் இளையராஜாவின் ‘என் இனிய பொன் நிலாவே’ இன்னும் ரசிக்க வைக்கிறது. தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவு, படத்தை ரிச்சாக காண்பிக்கிறது. சில இடங்களைத் தவிர விஎப்எக்ஸ் காட்சிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. கலை இயக்குநர் சண்முகத்தின் கடின உழைப்பும் தெரிகிறது. படம் போரடிக்காமல் போவதற்கு சான் லோகேஷின் எடிட்டிங்கும் காரணம்.

சித்த மருத்துவ பெருமையைப் பேசுவதற்காக மற்ற மருத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவது, படத்தின் வேகத்தைக் குறைக்கும் 2-ம் பாதி காதல் பாடல்கள், எமோஷனல் விஷயங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதது என சில குறைகள் இருந்தாலும் வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது இந்த ‘அகத்தியா’.

Related posts