‘சப்தம்’ திட்டமிடப்படி வெளியாகாததற்கு யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை என்று நடிகர் ஆதி தெரிவித்துள்ளார்.
பிப்.28-ம் தேதி திட்டமிட்டப்படி ‘சப்தம்’ வெளியாகவில்லை.
அப்படத்தின் மீதிருந்த பொருளாதார நெருக்கடி அனைத்தும் சரி செய்யப்பட்டு மார்ச் 1-ம் தேதி மதியக் காட்சியில் இருந்துதான் வெளியானது.
‘சப்தம்’ வெளியானவுடன் மக்களோடு ஆதி மற்றும் இயக்குநர் அறிவழகன் படம் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார்கள்.
அதில் ஆதி பேசும்போது, “28-ம் தேதி படத்துக்கு புக்கிங் நன்றாக இருந்தது. ஆனால், படம் வெளியாகவில்லை.
மார்ச் 1-ம் தேதி படம் வெளியாகிவிட்டது. இதற்காக யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை.
இதில் யாருடைய தவறும் கிடையாது. ஆனாலும் முதல் நாள் படம் வெளியாகாதது பெரிய நஷ்டம்.
முதல் நாள் திரையரங்குக்கு வந்துவிட்டு திரும்பிய அனைவரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்.
இது வேண்டும்னெறு செய்த விஷயம் கிடையாது.
மற்ற மொழிகளில் வெளியாகி கொண்டாடப்படும்போது தமிழில் வெளியாகாமல் இருந்தது ரொம்ப கஷ்டமாக இருந்தது.
‘சப்தம்’ படம் மார்ச் 1-ம் தேதி வெளியாகிவிட்டது என்பதை அனைவருக்கும் தெரிவியுங்கள்.
தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்த படம்.
மக்கள் அனைவரும் படம் பார்த்து நன்றாக இருக்கிறது என்று சொல்வதுதான் இந்தப் படத்துக்காக விளம்பரம்” என்று தெரிவித்துள்ளார் ஆதி.
அறிவழகன் இயக்கத்தில் ஆதி, லட்சுமி மேனன், லைலா, சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சப்தம்’.
7ஜி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் முழுக்க சத்தத்தின் பின்னணில் உருவாகியுள்ள ஹாரர் படமாகும்.
இதனை நல்ல ஒலியமைப்பில் உள்ள திரையரங்கில் காண வேண்டும் என்று இயக்குநர் அறிவழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.