கிராமத்தில் ஊர் தலைவரின் மகள் லீலா (ரூபா கொடுவையூர்). சிறுவயதிலிருந்தே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர், குடும்பம், சொந்த பந்தங்களின் செல்லப் பிள்ளையாக வலம் வருகிறார். ஒருநாள் இரவு லீலா தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அவரது மரணத்துக்கு ஆஸ்துமாவே காரணம் என ஊர் மக்களும், குடும்பத்தினரும் நம்புகின்றனர். இன்னொரு பக்கம் லீலாவின் அண்ணன், அம்மன் நகையை அவசர தேவைக்கு எடுத்துவிட்டு அதை திரும்ப வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். உண்மையில் லீலாவின் மரணத்துக்கு என்ன காரணம்? லீலாவின் வீட்டில் இருக்கும் மர்ம அறைக்கான பின்னணி என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது ‘எமகாதகி’.
படத்தின் ட்ரெய்லர் திகில் படம் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தினாலும் இப்படத்தை வெறுமனே ஒரு திகில் படம் என்று சொல்லிவிடமுடியாது. அமானுஷ்யத்தின் துணையுடன் பல ஆழமான விஷயங்களை நான் லீனியர் திரைக்கதை வழியே நேர்த்தியாக பேச முயன்றிருக்கிறார் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன்.
படம் தொடங்கியது முதலே அடுத்து ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்ற குறுகுறுப்பை ஆடியன்ஸுக்கு ஏற்படுத்தும் வகையில் கதையை நகர்த்தி கொண்டு சென்றது நல்ல உத்தி. அதை முடிந்த வரையில் கடைசி வரையிலும் தக்க வைத்திருக்கிறார்கள். ஒரு பக்கம் நாயகியின் கதை, இன்னொரு பக்கம் அவரது அண்ணனின் கதை, இடையிடையே பிளாஷ்பேக் என முன்பின்னாக கதையை கொண்டு சென்றிருந்தாலும் எந்த குழப்பமும் எழாத வகையில் திரைக்கதையை எழுதிய விதம் சிறப்பு. முக்கியமாக படம் சாதியும், கிராமங்களில் அது இயங்கும் விதம் குறித்தும் நுணுக்கமாக காட்சிப் படுத்திய விதத்துக்காகவே இயக்குநரை வெகுவாக பாராட்டலாம்.
நாயகி ரூபா படத்தில் உயிருடன் இருப்பதாக வரும் காட்சிகள் சில நிமிடங்களே. அதன்பிறகு பெரும்பாலான படத்திலும் பிணமாகவே நடித்திருக்கிறார். எனினும் தன்னுடைய இருப்பை படம் முழுக்க தெரியப்படுத்திக் கொண்டே இருக்கும் வகையிலான நடிப்பை தந்து அப்ளாஸ் பெறுகிறார். அடுத்ததாக படத்தில் குறிப்பிடத்தக்க நடிப்பை தந்திருப்பவர் நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம். ’மாமன்னன்’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ உள்ளிட்ட படங்களைப் போலவே இதிலும் அழுத்தமான கதாபாத்திரம். இவர்கள் தவிர படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் குறை சொல்ல முடியாத நடிப்பை வழங்கியுள்ளனர்.
படம் தொடங்கிய சில நிமிடங்கள் வரை வண்ணமயமாக நகரும் இருக்கும் காட்சிகளில், லீலாவின் மரணத்துக்குப் பிறகு ஒருவித இருள் சூழ்ந்துவிடுகிறது. இதற்கு சுஜித் சாரங்கின் கேமரா சிறப்பாக உதவியிருக்கிறது. குறிப்பாக இரவு நேர காட்சிகளிலும், நாயகியின் வீடு தொடர்பான காட்சிகளிலும் ஒளிப்பதிவு தரம். படத்தின் மிகப்பெரிய மைனஸ்களில் ஒன்று பின்னணி இசை. பெரும்பாலான இடங்களில் 90களின் சீரியல்கள் நினைவுக்கு தருவதை தவிர்க்கமுடியவில்லை. பல இடங்களில் காட்சிகளின் வீரியத்தை குறைப்பதில் பின்னணி இசை பெரும்பங்கு வகிக்கிறது என்பதே நிதர்சனம்.
முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் மெல்ல மெல்ல காணாமல் போய்விடுவது மற்றொரு மைனஸ். படத்தின் நீளம் குறைவுதான் என்றாலும் இரண்டாம் பாதியில் கிட்டத்தட்ட கிளைமாக்ஸ் வரையில் திரைக்கதையில் ஏற்படும் ஒருவித தொய்வு அயற்சியை தருகிறது. எனினும் எதிர்பாராத கிளைமாக்ஸ் மூலம் ஒரு அழுத்தமான செய்தியுடன் படத்தை நிறைவு செய்த விதம் திருப்தியை தருகிறது.
ஒட்டுமொத்தமாக படத்தின் மேக்கிங்கில் சில பிரச்சினைகள் இருந்தாலும், எடுத்துக் கொண்ட களத்தை எந்தவித சமரசமும் இல்லாமல் சொன்னதற்காகவும், சாதி என்னும் கொடிய விஷத்தை தோலுரிக்கும்படி எடுக்கப்பட்டதற்காகவும் ‘எமகாதகி’யை நிச்சயம் வரவேற்கலாம்.