‘சிக்கந்தர்’ படம் ரீமேக் என்று வெளியான தகவலுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிக்கந்தர்’.
ரம்ஜான் விடுமுறையை கணக்கில் கொண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த டீசர் வெளியானதில் இருந்து இப்படம் ‘சர்கார்’ படத்தின் ரீமேக் என தகவல் பரவியது.
இந்த தகவலுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து, “‘சிக்கந்தர்’ முழுக்க முழுக்க புதுமையான கதை. இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும், உண்மைத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும். இதன் கதை எந்தவொரு படத்தின் மறு உருவாக்கமுமோ, தழுவலோ அல்ல” என்று தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
‘சிக்கந்தர்’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு, மீண்டும் ‘மதராஸி’ பணிகளைத் தொடங்கவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு மட்டுமே எஞ்சி இருக்கிறது.
ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.