முறையான சட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்ஜசீரா ஊடகத்துக்கு குறிப்பிட்ட விடயங்களை அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ளாமல் முறையான சட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து பட்டியல்களை வெளியிட்டுக் கொண்டிருப்பது பயனற்றது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (9) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த கால அரசாங்ககளின் மோசடிகள் தொடர்பில் அரசாங்கம் தொடர்ச்சியாக பட்டியல்களை வெளியிடுகிறது. ஆனால் அதற்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. 75 ஆண்டுகால அரசியலையும், அரசியல்வாதிளையும் ஊழல்மோசடியாளர்கள் என்று வாய்க்கு வந்ததை போல் குற்றஞ்சாட்டினார்கள்.இதனால் நாட்டுக்கு சேவையாற்றிய சிறந்த அரசியல்வாதிகளும் அவமதிக்கப்பட்டார்கள்.

கடந்த அரசாங்கத்தில் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்ட நபர்களின் பெயர்கள் இதுவரையில் முழுமையாக வெளியிடப்படவில்லை. ஆனால் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றதை போன்ற சித்தரிப்பையே மக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தினார்கள்.

அரசியல்வாதிகள் ஊழல் மோசடி செய்துள்ளார்கள் என்று அரசாங்கம் பொதுவாக குறிப்பிடுகிறது. அவர்கள் யார் என்பதை மக்களுக்கு பகிரங்கமாக அறிவித்து விட்டு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதனை விடுத்து பாராளுமன்றத்திலும், பொது இடங்களிலும் பரீட்சை பெறுபேற்றை அறிவிப்பதை போன்று செயற்பட்டுக் கொண்டிருந்தால் ஏதும் மாற்றமடையாது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்ஜசீரா ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்ட விடயங்களை அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்ளாமல் முறையான சட்ட நடவடிக்கைளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். தேசிய மட்டத்தில் ஒரு விடயத்தை கையாள்வதற்கும், சர்வதேச மட்டத்தில் ஒரு விடயத்தை கையாள்வதற்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன என்பதை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

Related posts