“இத்தனை வருடங்களாக இசைத் துறையில் சொந்தக் காலில் நடப்பவன் நான்.
யாருடைய உதவியையும் எதற்கும் பயன்படுத்தியதில்லை” என்று தனது சிம்பொனி இசை குறித்து பிரபல இசையமைப்பாளர் இளையராஜா விளக்கம் அளித்துள்ளார்.
இளம் இசைக் கலைஞரான லிடியன் நாதஸ்வரம் தான் இளையராஜாவுக்கு சிம்பொனி எழுத உதவியதாக ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘லிடியன் நாதஸ்வரம் என்னிடம் இசை கற்க வந்தவர்.
ஒருமுறை நான் சிம்பொனிக்கு கம்போஸ் பண்ணியிருக்கேன் என்று ஒரு இசையை போட்டு காட்டினார். 20 விநாடி அதை கேட்டுவிட்டு, ‘இதென்ன சினிமா பின்னணி இசை மாதிரி பண்ணியிருக்கிறாய், இது தப்பாச்சே…
இது சிம்பொனி இல்லை. முதலில் சிம்பொனி என்றால் என்ன என்று தெரிந்துகொள். அதன் பிறகு கம்போஸ் பண்ணு’ என்று சொன்னேன்.
சினிமா பின்னணி இசை போன்ற ஒன்றை பண்ணிவிட்டு, அதை என்னிடம் ஒப்புதல் பெறுவதற்காக, எனது அங்கீகாரத்துக்காக கொண்டு வந்தார். அது சிம்பொனி இல்லை, சிம்பொனி கற்றுக்கொள் என்று அவருக்கு வழிகாட்டினேன்.
இத்தனை வருடங்களாக இசைத் துறையில் சொந்தக் காலில் நடப்பவன் நான். யாருடைய உதவியையும் எதற்கும் பயன்படுத்தியதில்லை. சொந்தக் கால் என்றால், செருப்பு கூட இல்லாத வெறுங்காலில் நின்று வளர்ந்தவன் நான்” என்றார் இளையராஜா.
லிடியன் விளக்கம்: இதனிடையே, “இளையராஜாவுக்கு சிம்பொனி இசைக்காக நான் குறிப்புகள் எதுவும் எழுதிக் கொடுக்கவில்லை.
இதில், அவருக்கு நான் எந்த உதவியும் செய்ய இல்லை. அவரது சிம்பொனி இசையைக் கேட்க ஆவலாக காத்திருக்கிறேன்” என்று லிடியன் பேட்டி ஒன்றில் கூறி, இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
முன்னதாக, இளையராஜா லண்டனில் உள்ள ஈவன்டின் அப்போலோ அரங்கத்தில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்தார்.
உலகின் சிறந்த ராயல் பில் ஹார்மோனிக் இசைக் குழுவுடன் இணைந்து இந்த சிம்பொனியை அரங்கேற்றினார்.
ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில், 45 நிமிடம் சிம்பொனி இசை அரங்கேற்றம் நடந்தது.
அவரின் இசைக் குறிப்புகளை 80 இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இசைத்தது பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.
இதன் மூலம் ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை அரங்கேற்றிய முதல் நபர் என்ற பெருமையை இளையராஜா பெற்றது குறிப்பிடத்தக்கது.