யாழ்ப்பாணத்தில் பாரிய வன்முறை குற்றங்களில் ஈடுபட்டுவரும் கும்பலொன்றின் தலைவர் என கூறப்படும் நபருக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
யாழில் வன்முறையில் ஈடுபட்டுவந்த கும்பலொன்றின் தலைவர் என கூறப்படும் நபரை வன்முறை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொலிஸார் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில், அந்த சந்தேக நபர் 2022ஆம் ஆண்டு உரும்பிராய் பகுதியில் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்து சென்றபோது, கூரிய ஆயுதங்களை காட்டி பொலிஸாரை அச்சுறுத்தி, சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதனை தொடர்ந்து, பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டதையடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதனையடுத்து, சந்தேக நபருக்கு எதிராக தொடுக்கப்பட்ட இவ்வழக்குக்கான தீர்ப்புத் திகதியென மார்ச் 11ஐ நீதிமன்றம் குறிப்பிட்டிருந்த நிலையில், வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சந்தேக நபர் மீதான குற்றச்சாட்டுக்களில் ஒன்றுக்கு 3 மாதகால கட்டாய சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம், ஏனைய குற்றச்சாட்டுக்களுக்கு 2 வருடங்கள் 4 மாத காலமென சிறைதண்டனை விதித்து, அதனை 10 வருட காலத்துக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்தது.