நோக்கங்கள் எவையும் நிறைவேற்றப்படவில்லை – பிரதமர்

கல்வியை இலகுபடுத்தும் நோக்கில் ஆயிரம் பாடசாலைகளுக்கு திறன் பலகைகள் (Smart Board) வழங்கும் திட்டத்தின் நோக்கங்கள் எவ்வகையிலும் எட்டப்படவில்லை எனவும் ரூ. 1.7 பில்லியன் முதலீடு குறை பயனுடையதாகவே உள்ளது எனவும் பிரதமர் தெரிவித்தார்.

பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகளை வழங்குவதன் ஊடாக வலையமைப்பு வகுப்பறைகளை நிறுவும் திட்டம் தொடர்பாக உரையாற்றும்போதே கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 2025.03.15 அன்று பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

“பாடசாலை முறைமையில் ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்குவதன் மூலம் கல்வியை எளிதாக்கும் நோக்கத்துடன், தெரிவுசெய்யப்பட்ட 1000 பாடசாலைகளுக்கு, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் நிதியைப் பயன்படுத்தி, ஸ்மார்ட் பலகைகள் மற்றும் ஏனைய உபகரணங்களை வழங்குவது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபனத்திற்கு AMP/24/0385/601/ 027 ஆம் இலக்க மற்றும் 2024 மார்ச் 04ஆந் திகதிய அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், AMP/24/0978/630/009 ஆம் இலக்கத்தையுடைய மற்றும் 2024 மே 14 ஆந் திகதிய அமைச்சரவை விஞ்ஞாபனம் மேலதிகமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அதன் மூலம் சீன அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட பாடசாலை டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்துடன் இணைந்ததாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சீன அரசின் இத்திட்டத்தின் மூலம் ஒரு மத்திய கட்டுப்பாட்டு அறை மற்றும் ஒரு ஒளிப்பட நிலையத்தை அமைப்பதற்கும் 500மேலதிக ஸ்மார்ட் பலகைகளை வழங்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது. அதன்படி, இந்த இரண்டு திட்டங்களையும் இணைத்து, 1500 பாடசலைகளுக்கு வலையமைப்பு ஸ்மாரட் வகுப்பறைகளை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த இரண்டு திட்டங்களையும் ஒருங்கிணைக்க சீன அரசு வழங்க உத்தேசித்துள்ள ஸ்மார்ட் பலகைகளின் விவரக்குறிப்புகளுக்கு சமமான வகையிலேயே இலங்கை அரசும் ஸ்மார்ட் பலகைகளை கொள்வனவு செய்ய வேண்டும் என மேற்படி அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2024 மே 14 ஆந் திகதிய மேற்படி அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைவாக, இலங்கை அரசாங்கத்தால் கொள்வனவு செய்ய உத்தேசிக்கப்பட்ட 100 ஸ்மார்ட் பலகைகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஜூலை 2024 ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொள்முதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோதும், சீன அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டம் பேச்சுவார்த்தை கட்டத்தில் இருந்துள்ளதுடன், அவர்களால் வழங்க முன்மொழியப்பட்ட ஸ்மார்ட் பலகைகளின் விவரக்குறிப்புகள் குறித்து எவ்விதமான உத்தியோகபூர்வ உடன்பாடும் எட்டப்படவில்லை என்பது அவதானிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், தெளிவற்ற மூலங்கள் மூலம் பெறப்பட்ட மற்றும் சீன அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படாத விவரக்குறிப்புகளைப் பயன்படுத்தி, வெளிப்படையான விலைமனு கோரிக்கைகளின்றி ஒரு விநியோகஸ்தரிடமிருந்து விலைமனுவைப் பெற்று, இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் மூலம் தொடர்புடைய கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் செலவிடப்பட்ட மொத்தத் தொகை 1.7 பில்லியன் ரூபாய். இது தவிர, சேவை மற்றும் நிறுவுதல் கட்டணமாக சுமார் 430 மில்லியன் ரூபாவை இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்திற்கு மேலும் செலுத்துவதற்கும் உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான அதிக பெறுமதியான கொள்வனவுகளை மேற்கொள்வதில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறையுடன் ஒப்பிடும் போது, மேற்கூறிய கொள்வனவு இயல்பான ஒழுங்குக்கு மாறான முறையில் வேகமாக மேற்கொள்ளப்பட்டதாக அவதானிக்கப்படுகிறது. அதாவது, 2024 ஜூலை 5 ஆந் திகதி விலைமனு கோரப்பட்டு, 2024 ஜூலை 15 அன்று விலைமனுக்கள் திறக்கப்பட்டு, தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவினால் 2024 ஜூலை 16 க்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்முதல் குழுவால் குறிக்கப்பட்ட 2024 ஜூலை 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் தொடர்புடைய அறிக்கை பரிசீலிக்கபட்ட பின்னர், அதே தினம் அதன் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேற்கூறிய பரிந்துரைகள் 2024 ஜூலை 23 அன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான அங்கீகாரம் 2024 ஜூலை 30 அன்று வழங்கப்பட்டதனை அடுத்து கொள்முதல் கட்டளை 2024 ஆகஸ்ட் 05அன்று விநியோகஸ்தருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த முழு செயன்முறைக்கும் ஒரு மாதமே ஆகியுள்ளது என்பது அர்த்தமாகும்.

இந்த கொள்வனவில், 1000 ஸ்மார்ட் பலகைகளுக்கான CIF பெறுமதி 3,135,392.50 அமெரிக்க டொலர்கள் HUAWEI நிறுவனத்தின் பிரதிநிதியாக காட்டப்படும் “Intelligent Express Limited HongKong” க்கு கடன் பத்திரத்தைத் திறந்து செலுத்தப்பட்டுள்ளதுடன், சீன உதவித் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் பலகைகளை வழங்குபவராக HUAWEI குறித்த அமைச்சரவை விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், இந்தத் திட்டத்திற்காக அத்தகைய விநியோகஸ்தரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பில் சீன அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை.

மேற்படி கொள்வனவு கட்டளையின்படி, தொடர்புடைய ஸ்மார்ட் பலகைகள் மற்றும் ஏனைய உபகரணங்கள் 2024 ஒக்டோபர் மாதம் கல்வி அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அவை தற்போது பத்தல கெதர ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேற்படி ஸ்மார்ட் பலகைகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள போதிலும், சீன அரசாங்கத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படவிருந்த தொடர்புடைய திட்டப் பகுதி இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுடன் அதற்கான இறுதி உடன்பாடும் எட்டப்படவில்லை.

சீன அரசாங்கத்தால் வழங்க முன்மொழியப்பட்ட வலையமைப்பு வசதி மற்றும் மத்திய தொகுதி குறித்த இறுதி இணக்கப்பாட்டிற்கு முன்பே இந்த ஸ்மார்ட் பலகைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ள காரணத்தினால், எதிர்பார்க்கப்பட்ட பணிக்கு இந்த உபகரணங்களை பயன்படுத்த முடியாது போயுள்ளது. தற்போதும் கலந்துரையாடல் மட்டத்தில் உள்ள சீன உதவித் திட்டம், இந்த ஆண்டு இறுதி வரை காலதாமதமாகலாம். மேலும் அதற்குத் தேர்ந்தெடுக்கப்படும் விநியோகஸ்தர் குறித்து உத்தியோகபூர்வமாக எந்த முடிவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்த சூழ்நிலைகளின் கீழ் தற்போது களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள இந்த 1000 ஸ்மார்ட் பலகைகள் மற்றும் ஏனைய உபகரணங்களை பாடசாலைகளுக்கு விநியோகித்தால் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் அதிபர்களுக்கு குறிப்பிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என்பதோடு, சீன உதவியின் அடிப்படையில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்ட திட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாததால், இந்த உபகரணங்களை எவ்வாறு நிறுவுவது மற்றும் பயன்படுத்துவது என்பது குறித்த குறிப்பான அறிவுறித்தல்களை வழங்க முடியாதுள்ளது.

இந்த நிலையில், குறித்த ஸ்மார்ட் பலகைகளை வலையமைப்பு செய்ய முடியாதுள்ளமையால், அவற்றை தனிப்பட்ட வகுப்பறைகளாக மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் இத்திட்டத்தின் நோக்கங்கள் எவ்வகையிலும் நிறைவேறாது என்பதுடன், இதுவரை செலவிட்டுள்ள 1.7 பில்லியன் முதலீடு ஒரு குறை பயன்பாடாகவே காணப்படுகின்றது.

இந்த கொள்முதல் தொடர்பாக ஏதேனும் நிதி மற்றும் நடைமுறை முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து முறையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக சீன அரசாங்கத்துடனும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது, விரைவில் சீன அரசாங்கத்திடம் இருந்து முன்மொழியப்பட்ட வசதிகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது,” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Related posts