வேலையற்ற பட்டதாரிகளின் தொழிலுக்கு

தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டே வேலையற்ற பட்டதாரிகள் பாராளுமன்ற சுற்று வட்டாரத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனால் வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்க முடியுமான உறுதியான காலவரையறையை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பக்கம் 72 இன் பிரகாரம் 20 ஆயிரம் பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு உள்ளீர்த்தல், தகவல் தொழிநுட்ப துறையில் 3000 பட்டதாரிகள் மற்றும் 9000 விஞ்ஞான தொழிநுட்ப கணித பட்டதாரிகளை உள்ளீர்த்தல், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு, சுங்கத் திணைக்களத்திற்கு, வெளிநாட்டுச் சேவைக்கு, சுற்றுலா கைத்தொழிற்றுறைக்கு மேலும் 3000 பேரை உள்ளீர்ப்போம் என வாக்குறுதியளித்திருக்கிறது. இவ்வாறு கூறியவாறு தொழில் கிடைக்காத காரணத்தினால் நேற்றும் இன்றும் பட்டதாரிகள் பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி கூறியது போலவும், தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளபடியும், தொழில் வழங்கும் தினம் குறித்து குறிப்பிட்ட கால அட்டவணையை வழங்க முடியுமாக இருந்தால், பொல்துவ சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க முடியுமாக இருந்தால் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட மாட்டார்கள்.

2025ஆம் ஆண்டு வேலையில்லாப் பட்டதாரிகளின் பொற்காலம் என்று தற்போதைய ஆளுந்தரப்பினரால் இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், இதற்கான ஏற்பாடுகள் எதனையும் இதுவரையில் காணக்கூடியதாக இல்லை. அதனால் தொழில் வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் சரியான காலப் பிரிவு மற்றும் வேலைத்திட்டத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்”என்றார்.

Related posts