‘அண்ணாத்த’ படத்தின் தாமதத்தால், சூர்யா நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளார் சிவா.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் சூர்யா நடிக்கவிருந்த படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் சிவா. ‘விஸ்வாசம்’ படத்தின் மாபெரும் வெற்றியால் ரஜினி அழைத்துக் கதை கேட்க, அவரும் நடிக்கச் சம்மதம் தெரிவித்தார். இதனால் ரஜினி படத்துக்குப் பிறகு சூர்யா படம் என்று பேசி முடிவு செய்தார்கள்.
பின்பு, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்க ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார் சிவா. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இமான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். கரோனா அச்சுறுத்தல், ரஜினி உடல்நிலை பாதிப்பு ஆகியவற்றால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இன்னும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு சுமார் 40 நாட்கள் வரை இருக்கிறது. இதனைச் சென்னையிலேயே படமாக்கத் திட்டமிட்டது படக்குழு. ஆனால், ஏப்ரலிலிருந்துதான் தேதிகள் என்று ரஜினி தரப்பு சொல்லிவிட்டது. தற்போது வரை படமாக்கிய காட்சிகளின் எடிட்டிங் பணிகளை முடித்துவிட்டார் சிவா.
இந்தத் தருணத்தில் சும்மா இருக்க வேண்டாம் என்று, அடுத்து இயக்கவுள்ள சூர்யா படத்தின் முதற்கட்டப் பணிகளைக் கவனித்து வருகிறார். முன்பு பேசியது போலவே, சூர்யா படத்தைத்தான் அடுத்து சிவா இயக்கவுள்ளார் என்கிறது தயாரிப்புத் தரப்பு.
‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்து, இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டு உடனடியாக சூர்யா படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிவிட வேண்டும் என முடிவு செய்துள்ளனர். இந்தப் படத்தைத் தொடங்கும் முன் பாண்டிராஜ் படம், தா.செ.ஞானவேல் படம் ஆகியவற்றை முடிக்கத் திட்டமிட்டுள்ளார் சூர்யா.
அண்ணாத்த’ தாமதம்: சூர்யா படப் பணிகளைத் தொடங்கிய சிவா
